சேலம் பள்ளப்பட்டி பகுதியிலிருக்கும் லீ பஜார் வர்த்தக சங்கத்தில் கடந்த சில நாள்களாக வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து விற்பனை ஆகிவந்தது. தற்போது மகாராஷ்டிராவிலிருந்து லாரிகளில் வெங்காய மூட்டைகள் வரத் தொடங்கியுள்ளதால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த சில நாள்களாக, முதல் தர பெரிய வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் இந்த முதல் தர பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை ஆக தொடங்கியுள்ளது.
பெரிய வெங்காயம் கிலோவிற்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது.
இதுபோன்று கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிவந்த சின்ன வெங்காயம் இன்று காலை முதல் கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்ததால் உணவக உரிமையாளர்கள், கடைக்காரர்கள் பெரிய வெங்காயத்தை அதிகளவு வாங்க தொடங்கியுள்ளனர்.
மேலும் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வெங்காயம் அதிக அளவில் லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைப்பார்கள் என்றும் இனி படிப்படியாக விலை குறையும் என்றும் வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வெங்காயத்தை மானிய விலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குவது போல, தமிழ்நாடு அரசும் வெங்காயத்தை இறக்குமதி செய்து, உடனடியாக மானிய விலையில் 35 ரூபாய்க்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெங்காயத்தை கழுத்தில் மாலையாகத் தொடுத்துக் கொண்டும் மோதிரமாகவும் பிரேஸ்லெட்டாகவும் கையில் அணிந்து கொண்டும் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: "வெங்காயத்தோடு போட்டியிடும் மல்லிகைப்பூ"