சேலம்: கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், 45க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்களும் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள், அடிப்படை வசதிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவை அதிகரித்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அல்லல்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு உடனடியாக சேலம் மாவட்டத்திற்கு தேவைப்படும் வகையில், ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, சேலம் இரும்பாலை வளாகத்தில் அதற்கான இடத்தை தேர்வு செய்து கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த சிறப்பு சிகிச்சை மையம், 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்டு அமைக்கப்படுகிறது. மேலும், இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை சிகிச்சை மையத்திற்கு தேவைப்படும் அவசர ஊர்திகள், சாலை வசதி, நோயாளிகளின் படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணி, வடிகால் வசதிகள் ஆகியவை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் கூறுகையில், "இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதிகள் அமைக்கப்படுகின்றன. இரும்பாலையில் இரும்பு உற்பத்திக்காக தயார் செய்யப்படும் ஆக்சிஜன் இங்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் ஜே.எஸ். டபிள்யூ உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உதவியுடன் சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் சுகாதாரத்துறை, ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 10 நாள்களில் இந்த சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன" என்றார்.
முன்னதாக, இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய சிகிச்சை மையத்தை சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜ முத்து, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வரதராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், கரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் மருத்துவமனைகளில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படாது என்று அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: ஒரு கோடி ரூபாய் வழங்கிய அதிமுக