நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவன் உதித்சூர்யாவை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு சம்பவம் தொடர்பாக மருத்துவர் முகமது சபி என்பவர் நேற்று முன்தினம் சிபிசிஐடி காவல்துறையினரால் வாணியம்பாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது மகன் இர்ஃபான் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய சிபிசிஐடியினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவர் இர்ஃபான் மொரிசியஸ் நாட்டில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில் மாணவன் இர்ஃபான் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சிவா முன்னிலையில் இன்று சரணடைந்தார். சரணடைந்த இர்ஃபானை வரும் ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே இர்ஃபான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாணவர் இர்ஃபான் மொரிசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருவதாகவும் தருமபுரியில் மருத்துவப் படிப்பில் அவர் சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இர்ஃபான் மற்றும் அவரின் பெற்றோருக்கு சிபிசிஐடியினர் நெருக்கடி கொடுப்பதாக வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்க’ - முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி