சேலம்: திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆ. ராஜா (58). இவர் திமுக சேலம் (கிழக்கு) மாவட்டப் பொறுப்பாளராகப் பதவி வகித்துவந்தார். அதனையடுத்து திமுகவின் தேர்தல் பணிக்குழுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு 58ஆவது பிறந்தநாள் என்பதால் அதற்கான விழா ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் சேலத்தில் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜா அங்கேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை அவரது ஆதரவாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுசென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
வீரபாண்டி ராஜா மறைவு பேரிடி
இவரது மறைவுக்கு மு.பெ. சாமிநாதன், ”வீரபாண்டி ஆ. ராஜா மறைந்த செய்தி பேரிடியாக உள்ளது. இந்தச் சோக சம்பவம் குறித்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவுள்ளார்” என இரங்கல் தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் அண்ணா பட்டு மாளிகை அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழாவில் சாமிநாதன் கலந்துகொண்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க : 'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!