சேலம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த இருப்பதாகத் தகவலளித்தார்.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து வன்முறைக்குள்ளாவது, எதிர்க்கட்சியினர் மீது நடக்கும் சொத்துக்குவிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாபெரும் சைக்கில் பேரணி
'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் பொதுமக்கள் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், மத்திய அரசின் வரி விதிப்பே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம்' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், 'மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக வரும் அக்.30ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
இலங்கை அரசுடன் இந்திய அரசு நட்புடன் பழகி, பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் பற்றி கவலை கொள்வதில்லை என்ற நிலைதான் நீடித்து வருவதாக' கூறினார்.
எதிர்க்கட்சிப் பணியை மறந்த அதிமுக
தற்போது தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை தொடர்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் பிரச்னைக்காக ஆளுநரை சந்தித்துள்ளார்; இது மக்கள் நலனுக்கான சந்திப்பாகத் தெரியவில்லை. தங்களுடைய பிரச்னைக்காகவும், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மட்டுமே, தமிழ்நாட்டின் ஆளுநரை நேரில் சந்தித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மக்கள் பிரச்னைகள் பற்றி, கவலை கொள்ளாமல், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழியில் எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் உள்ளதாகக் கூறினார்.
மீனவர் இறப்பிற்கு இழப்பீடு
"தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய அரசு இதனைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
சில நாட்களுக்கு முன், இலங்கை படகு மோதி, மூன்று நபர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும், இறந்தவரின் சடலத்தையும் இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
இது மிகவும் கொடுமையான செயலாக உள்ளது. எனவே, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, இறந்தவரின் சடலத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ’இந்தியா புத்த மத நம்பிக்கையின் மையப்புள்ளி’ - பிரதமர் மோடி பேச்சு