சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரேனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "சேலம் மாவட்டத்தில் கரோனா இல்லாத நிலையை உருவாக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகிய நான்கு துறையும் இந்தப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடமாகக் கண்டறியப்பட்ட உழவர் சந்தைகள், தனியார் காய்கறி மார்க்கெட்டுகள் ஊரடங்கு முடியும்வரை முழுமையாக மூடப்படும். மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றின் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 177 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு இரண்டு குழு வீதம் மொத்தம் 354 குழுக்கள், நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்துக் குழுக்கள் 20 ஊராட்சிப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைக்கு உதவும் பணிகளை செய்வார்கள்.
ஊரடங்கை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்கும் வகையில் வருவாய்த் துறை குழு செயல்படுவார்கள். கடந்த 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று 13.32 விழுக்காடாக இருந்தது. தற்போது அரசின் முழு நடவடிக்கைகள் காரணமாக 10.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. விரைவில் பூஜ்யம் விழுக்காட்டிற்கு கொண்டு வரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சரின் பயணத்திட்டம்