சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
ஏற்காடு மலைப்பாதையில் தொடர் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம் ஆய்வு செய்தார்.
48 மணி நேரத்தில் போக்குவரத்துச் சீராகும், அதுவரை ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு முழுவதும் சீராக மழை பெய்தபோதிலும் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப்பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் அவர் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மாற்றுப்பாதையில் ஏற்பாடு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிகளில் 48 மணி நேரத்தில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏற்காடு பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்ற காரணத்தால், முன்னெச்சரிக்கையாக கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
சீரமைப்புப் பணிகள் முடியும் வரை ஏற்காடு - குப்பனூர் சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம்; இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
பாதிப்புகளைத் தவிர்க்க வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
சாலை ஓரத்தில் இருந்த பாறைகள் மற்றும் தடுப்புச்சுவர், கற்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்த காரணத்தால், வாகனப்போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், முன் எச்சரிக்கையாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல் துறையின் சோதனைச் சாவடியில் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: கோயில் நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் - தமிழ்நாடு அரசு தகவல்