சேலம் : புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, சமீபத்தில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவருக்கும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் விலங்கியல் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி நீட் தேர்விற்காக சேலத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அவரிடம் இளைஞர் நீட் தேர்வு தொடர்பாக தனி பயிற்சி தருவதாகக் கூறி, சேலத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளார். அப்போது மாணவியும் தெரிந்த நபர் தானே என்று நினைத்து, அவர் சொன்ன தனியார் தங்கும் விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவி அந்த அறைக்குள் சென்றதும் இளைஞர் கதவை மூடிவிட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இளைஞனை கண்டித்துள்ளார். உடனே இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, தனது இச்சைக்கு இணங்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது சுதாரித்துக் கொண்ட மாணவி அவரிடமிருந்து கத்தியை பிடிங்கி தன்னைத் தற்காத்துக் கொள்ள, இளைஞரை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இளைஞனும் அந்த மாணவி வைத்திருந்த கத்தியை பிடுங்கி, மாணவியின் கழுத்தில் குத்தியதாக சொல்லப்படுகிறது. இருவரும் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரை காக்க சத்தமிட்டுள்ளனர்.
பின்னர் அவர்களின் அலறல் சத்தம் கேட்ட தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் அழகாபுரம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் விரைந்து சென்றுள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்த நிலையில், தற்போது அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் பிளஸ் 2 முடித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி கடந்த ஒரு மாதமாக சேலத்தில் தங்கி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நீட் தேர்வு மையத்தில் படித்து வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சி வகுப்பு முடிந்து விடுதிக்கு புதிய பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரது தந்தைக்கு போன் செய்வதற்காக, இளைஞனிடம் உதவி கேட்டுள்ளார். இளைஞனும் தனது செல்போனை கொடுத்து அந்த மாணவியை அவருடைய பெற்றோருடன் பேச உதவியதாவும், அதன் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டதாகவும், மாணவிக்கு சில முறை இளைஞர் பண உதவிகளும் செய்து வந்ததும் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி இளைஞர் மாணவியை தான் தங்கி உள்ள விடுதிக்கு அழைத்துள்ளார். அங்குதான் மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது தகராறு ஏற்பட்ட காரணத்தால், எதிர்பாராத விதமாக இருவரும் மாறி மாறி கக்தியால் குத்திக் கொண்டது தெரிய வந்தது. மேலும் இளைஞர் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை!