சேலம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஹால்மார்க் விதிகள் 'HUID' சட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் காலை மூன்று மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகை கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, பணியாளர்கள் கடைகள் முன்பு, மத்திய அரசின் தங்க நகை சட்டம் HUID வேண்டாம் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திரும்ப பெற வேண்டும்
இப்போராட்டத்தில் சேலம் மாநகரத்தை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட நகைக்கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், “இந்த சட்டத்தால் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நகைகளை வழங்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பணிகள் நிறைவடைய மூன்று தினங்கள் ஆகிறது.
தற்போது இந்த புதிய HUID முறை காரணமாக மேலும் பல நாட்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்” என்றார்.