சென்னை : சேலம் - தாரமங்கலம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தண்டு மாரியம்மன் கோயில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் சக்திவேல் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அரசு அளித்த விளக்கத்தில் “சேலம் ஆட்சியர், மேட்டூர் சார் ஆட்சியர், செயற்பொறியாளர், நகரப் பஞ்சாயத்து உதவி இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து தாரமங்கலத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது”. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு அளித்த உத்தரவாதத்தின்படி குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை என உயர் நீதிமன்றத்திற்கு சக்திவேல் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு கடந்த ஆண்டு எடுத்த சூமோட்டோ வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள அரசு அலுவலர்களுக்கு எதிராக தற்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க:முட்ட பாய்ந்த எருது.. ஒதுங்கிய பசவராஜ் பொம்மை!