சேலம்: சேலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். அப்போது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு ஐஜேகே நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், "ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். இதற்கான தேர்தல் பரப்புரை களத்தில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.
இந்த சந்திப்பின்போது, இந்திய ஜனநாயக கட்சியின் முதன்மை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞர் அணி செயலாளர், மாநில நிர்வாகக் குழு தலைவர் வரதராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் மோகன் குமார், மாநகர் மாவட்ட தலைவர் அருள்மணி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், புறநகர் மாவட்டத் தலைவர் மனோகரன், மேற்கு மாவட்டம் வெங்கடேசன் மற்றும் தருமபுரி மாவட்ட தலைவர் நஞ்சப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஈபிஎஸ்சுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதிமுக' ஒற்றைத் தலைமை வழக்கு கடந்து வந்த பாதை!