சேலம் மாவட்டம் ஏற்காடை அடுத்த கொட்டச்சேடு பகுதியில் கடந்த மாதங்களில் கடுமையான வெப்பத்தால் இப்பகுதியில் இருந்த நீரோடைகள் முழுவதும் வறட்சியாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தற்போது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் உற்பத்தியாகியுள்ளது. இது சுற்றுலாபயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொட்டச்சேட்டில் இருந்து ஏற்காடு செல்லும் பாதையில் உள்ள ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓடையில் சீறிப்பாயும் வெள்ளத்தை அந்த வழியே செல்லும் மக்கள் கண்டு ரசித்தும், தங்கள் செல்போன்களில் படம் பிடித்தும், செல்கின்றனர்.
இந்நிலையில் ஓடைகளில் செல்லும் வெள்ளநீரால் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.