சேலம்: குகை பகுதியைச் சேர்ந்தவர்கள் இயேசுதாஸ் (51) - ரேவதி (47) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரேவதிக்கும், இயேசுதாஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
இதனால் ரேவதி, நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கணவரின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில் அவருடன் சேர்ந்து வாழ ரேவதிக்கு விருப்பமில்லாமல் இருந்துவந்தது.
மனைவி மீது ஆசிட் வீச்சி
ஆகையால் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று சேலத்தில் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் பிரிந்துசெல்ல முடிவெடுத்தனர். இதற்காக நாமக்கல்லிலிருந்து ரேவதி அவரது தாயார் ஆராயி ஆகியோர் ஆகஸ்ட் 30 அன்று மாலை சேலம் வந்தனர்.
பின்னர் ரேவதி ஊர் திரும்புவதற்காக தாயாருடன் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த கணவர் இயேசுதாஸ் ஆசிட்டை எடுத்து வந்து மனைவியின் மீது ஊற்றி கொலை செய்தார்.
பாய்ந்த குண்டர் சட்டம்
இது தொடர்பாக இயேசுதாஸிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சேர்ந்து வாழ மறுத்த தன் மனைவி ரேவதி மீது இயேசுதாஸ் ஆத்திரத்தில் ஆசிட் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேவதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார்.
இதனிடையே சேலம் நகர காவல் துறையினர் இயேசுதாஸை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்நிலையில் சிறையில் இருக்கும் ஏசுதாஸ் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்தவர் கைது