சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், விதிமுறைகளை மீறி வாகனம் இயக்குபவர்களை கண்காணித்து, அவர்களின் வாகன எண்ணைப் படம்பிடித்து வீட்டிற்கு அபராத ரசீது அனுப்பும் புதியரக ஏ.என்.பி.ஆர் என்ற நவீன கேமராக்கள் சேலம் ஐந்து ரோடு பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் கூறுகையில், "ஐந்து ரோடு இரண்டடுக்கு மேம்பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம், சேலம் சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா அல்லது சீட் பெல்ட் அணிந்துள்ளனரா, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்கின்றனரா என்றும், சாலையில் உள்ள எல்லைக் கோட்டை தாண்டாமல் வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கப்படும்.
இந்த திட்டம் டிசம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த கேமராவின் மூலம் விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக போட்டோவாக பதிவு செய்து காவல்துறை கண்காணிப்பு அறை டெல்லி தேசிய தகவல் மையம் ஆகியவற்றில் தானியங்கி முறையில் பதிவாகிவிடும். அத்துடன் வாகன பதிவு எண்ணை கொண்டு அவரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு விதி மீறலுக்கான அபராத தொகை அனுப்பி வைக்கப்படும்.
அபராதத் தொகை தொடர்பான விவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை செலுத்தாமல் இருந்தால் அது கூடுதலாக அதிகரித்துக் கொண்டே வரும்." என்று தெரிவித்தனர்.
டிசம்பர் 1ஆம் தேதி முதல், சேலத்தில் வாகனம் இயக்குபவர்கள், கட்டாயம் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டரின் அதிசய காயா வேம்பு பதி!