தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைற்று வருகிறது. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலில் உள்ளன. அதன்படி உரிய ஆவணம் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடையுள்ளது.
இந்நிலையில், சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் லைன் மேடு பகுதியில் ஆனந்த் யுவனேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குகைப் பகுதியைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான 129 ஜோடி வெள்ளி கொலுசுகளைக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கொலுசுகளைப் பறிமுதல் செய்து சேலம் தெற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷிடம் ஒப்படைத்தனர்.