சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கொட்டவாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்குச் சொந்தமான அரை சென்ட் நிலத்தைக் குடும்பச் சூழ்நிலை காரணமாக, அதேப் பகுதியை சேர்ந்த காளியம்மாள் என்பவரிடம் விற்பனை செய்து உள்ளார்.
மாரிமுத்துவிடமிருந்து நிலம் கிரயம் செய்து பெற்றுக்கொண்டு காளியம்மாள், நிலத்திற்கான பணத்தைத் தராமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாரிமுத்து நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அரசு அலுவவர்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த முதியவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த காவல்துறையினர், முதியவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து, முதியவரை சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதியவரின் தற்கொலை முயற்சி சம்பவத்தால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும படிங்க: ட்ரம்ப் வருகை - அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!