சேலம்: சேலம் ஏற்காட்டில் தனியாருக்கு சொந்தமான புதிய தங்கும் விடுதியை திறந்து வைத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
"சட்டப்பேரவைத் தேர்தல் 3 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சி அமைத்துள்ளது. நாற்பத்தி ஐந்து தொகுதிகளில் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோல்வி அடைந்துள்ளோம். இது நமக்கு பின்னடைவு அல்ல.
தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடாக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலத்திற்கு பெருமை
கடந்த முறை நாம் ஆட்சியில் இருந்தபோது ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினோம். ஆனால் இந்த முறை திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் அலுவலர்கள், மக்களை மிரட்டி ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்று உள்ளனர். நான் சுமார் நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளேன். முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை சேலம் மாவட்டத்திற்கு கிடைத்தது.
அதிமுக கோட்டை
ஏற்காடு பகுதி மட்டுமல்ல. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு திட்டங்களையும் சாலை வசதி உள்ளிட்ட அனைத்தையும் வசதிகளையும் கொண்டு வந்துள்ளோம்.
தற்போது நாம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளோம்." என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் வரதராஜ் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'எம்ஜிஆர் மாளிகை'யாக மாறும் அதிமுக தலைமைக்கழகம்!