தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவகங்கள் இனிப்பகங்கள் மற்றும் பேக்கரிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் ஸ்வீட் பார்சல்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் ஓமலூர் சாலையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளில் பார்சல்களை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், ‘ஓட்டல்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள், பட்டாசு கடைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு பார்சல்களை பிளாஸ்டிக் பைகளில் வழங்குவதைத் தவிர்த்து துணிப்பைகளில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், இனிப்பு பெட்டிகளின் காகித அட்டைகள், பட்டாசுகளை சுற்றியுள்ள பிளாஸ்டிக் உறைகள் போன்றவற்றை தெரியாமலும் சாக்கடை கால்வாய்களில் போடாமல் தாமாக முன்வந்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக துணிப்பைகளில் பொருட்களை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு... தொங்கும் பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!