சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 12ஆவது வார்டு மற்றும் 29ஆவது வார்டு பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், இன்று பாலம் அமைப்பதற்கு, நிலம் அளவிடும் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வந்தனர். இதனையறிந்த 12ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சங்கீதா நீதி வர்மன் மற்றும் 29ஆவது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கிரிஜா குமரேசன் மற்றும் திமுக பிரமுகர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாக்கடை நீர் செல்ல சாலையின் குறுக்கே சிறிய பாலம் அமைக்க கூடாது, ஏற்கனவே சாக்கடை நீர் செல்லும் வழியிலேயே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் குமரேசன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுமதி என்ற அதிகாரியை ஒருமையில் பேசி, இந்தப் பகுதியில் 'கால் வைத்தால் கை, கால்களை தனித்தனியாக எடுத்து விடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பெண் அதிகாரி குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைய செய்தனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியை மேற்கொள்ளாமல் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: kakinada tragedy: எண்ணெய் டேங்கர் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளர்கள் பலி!