ஆயுத பூஜை நாள்களில் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக பூசணிக்காயில் சூடம் ஏற்றி உடைக்கும் வழக்கமும் மக்களிடம் இருந்து வருகிறது.
அந்தப் பூசணியை சாலையின் நடுவில் உடைப்பதைத் தவிர்த்து, ஒதுக்குப்புறமான இடங்களில் உடைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் இந்த வேண்டுகோளை காது கொடுத்து கேட்டவாறு தெரியவில்லை. சேலம், அம்மாபாளையம், சூரமங்கலம், ஜங்ஷன், அரிசிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பூசணியை சாலைகளில் உடைத்தும், அதை அப்புறப்படுத்தாமல் அதே இடங்களில் விடுவதாலும் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தில் இருந்து மக்களைக் காக்கும் வண்ணமே மாநகராட்சி நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதனைப் பற்றி சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'பொதுமக்கள் தங்கள் சடங்கு முறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, பூசணியை பொதுஇடங்களில், சாலைகளில், வீதிகளில் அல்லாமல் சற்று தள்ளி உடைப்பது நலம். அதனை அவர்களே அப்புறப்படுத்துவது இன்னும் நலம்' என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில் இவ்வளவு தாமதமா? தடையா? - சிறப்புக்கட்டுரை