சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்து உள்ள செம்மாண்டப்பட்டி கொப்பத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அதிமுகவில் உறுப்பினராக உள்ள இவர், எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் தனி அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில்" சேலம் நடுப்பட்டியை சேர்ந்த மணி என்பவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளராக இருப்பதாகவும், அவர் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020 வரை மேச்சேரி அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்த சிவக்குமாரும், தானும் 25 பேரிடம் பணம் வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
வனத்துறை, மின்சாரத்துறை, அரசுப் பள்ளியில் உள்ள ஆய்வகம், ரேஷன் கடை, கால்நடைத்துறை மற்றும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலைக்கு என மொத்தம் 25 பேரிடம், ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு மணியிடம் கேட்டதாகவும், அவரும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.60 லட்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள ரூ.77 லட்சத்து 50 ஆயிரத்தை இதுவரை கொடுக்கவில்லை என்றும், எங்களை ஏமாற்றி அலைக்கழித்து வந்த நிலையில், தற்போது பணம் கொடுக்க மறுப்பதுடன் தரக்குறைவான வார்த்தையால் பேசி, வீட்டிற்கு வந்தால் அடையாளம் தெரியாமல் செய்துவிடுவேன் என மிரட்டி வருவதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். எனவே அவரிடம் கொடுத்த பணத்தை மீட்டுத் தருவதுடன், மணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையும் படிங்க : கோடநாடு: மேல் விசாரணைக்குத் தடை கோரி வழக்கு