நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை பெற்றோரிடத்தில் இருந்து முறைகேடாக பெற்று போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து லட்சக்கணக்கான ரூபாயில் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செவிலி அமுதவள்ளி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷிடம், சேலம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செவிலி அமுதவள்ளி, அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அலுவலர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், அமுதவள்ளியை இரண்டு நாட்களும், ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய இருவரையும் மூன்று நாட்களும் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி அளித்தது.
இதையடுத்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து மூன்று பேரையும் சிபிசிஐடி அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.