சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, காந்தி நகரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மரச்சிற்ப சிலை வடிவமைப்பு தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலை நயத்துடன், கடவுள் மரச் சிலைகள், புராண கதைகளில் வரும் கதை நாயகர்களின் உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மரச் சிற்பங்களை வடிவமைக்கின்றனர். இவை ஒரு அடி முதல், 10 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகின்றன. இவை தூங்கவாகை, தேக்கு, மாவிலங்கு, இலுப்பை, அத்தி உள்ளிட்ட மரங்களைக் கொண்டு செதுக்கப்படுகின்றன.
மிகவும் நேர்த்தியான கைவேலைப்பாட்டுடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த தம்மம்பட்டி மரச் சிலைகள் தமிழர்களின் பாரம்பரிய சிற்பக் கலையை வெளி உலகுக்கு பறைசாற்றி வருகின்றன. கண்ணைக் கவரும் இந்த சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
கலை நயமிக்க இந்த மரச் சிற்பங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, டெல்லி, கேரளா, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், கடந்த 2012ஆம் ஆண்டு தம்மம்பட்டி மரச் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கி, அதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு விரைவில் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து புவிசார் குறியீடு பெறும் 36ஆவது பொருளாக தம்மம்பட்டி மரச் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களின் பேரில் போலிகள் உருவாவது தவிர்க்கப்பட்டு, தரமான சிலைகளின் விற்பனை பெருகும் என்றும், சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுமெனவும் மரச் சிற்பக் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், தயாரிக்கப்படும் பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க வெண் பட்டு வேட்டிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு குறியீடு வழங்கப்பட்டிருந்தது. இதேபோல் சேலத்தில் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க வெள்ளிக் கொலுசுகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக கொலுசு விற்பனையாளர்கள் சில மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.