பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தமிழக மக்களிடையே பெண்களின் பாதுகாப்பு குறித்த பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்துவிட்டது என்றும் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு மறைமுகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்கள், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற வளாக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பாலியல் வழக்கில் கோயம்புத்தூர் எஸ்பி பாண்டியராஜன், புகார் தரும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது.எனவே, உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுத்து, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி எச்சரித்துள்ளனர். அதனைத்தாண்டி இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.