சேலம்: 25 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்," 2020 - 2021ஆம் கல்வியாண்டில் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் விவரம், தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதற்கான தகவல் அந்தந்த பள்ளி வளாகத்தில் உள்ள பலகைகளில் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஒட்டப்பட உள்ளது.
மேலும் தகுதியான விண்ணப்பங்கள் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக உள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குலுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. எனவே தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் " என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசியாவின் பழமையான யானை இந்தியாவில் உள்ளது என்றால் நம்புவீர்களா?