சேலம்: சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்றவர். இந்த நிலையில், அண்மையில் சிறையிலிருந்து வெளி வந்துள்ளார் தங்கராஜ். இவர் மீண்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த ரேஷன் அரிசி கடத்தலைக் கண்டு கொள்ளாமல் இருக்க, தனக்கு மாதந்தோறும் ரூபாய் 20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தலைமைக் காவலர்களான பிரபாவதி மற்றும் மணி ஆகியோர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஏற்கனவே ரூபாய் 10 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்த தங்கராஜ், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் 4 முக்கிய ரயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
இந்நிலையில், இடைத்தரகராகச் செயல்பட்ட குமரேசன் என்பவர் தங்கராஜிடம் இருந்து மீதம் ரூபாய் 10 ஆயிரம் தொகையைப் பெற்றார். அப்போது மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்து கையும் கலவுமாகப் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து குமரேசனிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டு சேலம் மாவட்டம் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமைக் காவலர்களான பிரபாவதி மற்றும் மணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரபாவதி மற்றும் மணி ஆகியோர் இடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிரபாவதி மற்றும் மணி ஆகியோர் தங்கராஜிடம் இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: மத்திய சுகாதார அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்..!