ராணிப்பேட்டை: அரக்கோணம் பகுதியில், அம்பேத்கர் நகர் சாணாத்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற குதிரை சுரேஷ் (26). இவர் மீது அரக்கோணம் டவுன் போலீசில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் குதிரை சுரேஷ் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து அரக்கோணத்தில் கஞ்சாவை விற்பனை செய்து விட்டு தப்பி செல்வதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சென்னை அண்ணனூர் பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷ் என்கிற குதிரை சுரேஷை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குதிரை சுரேஷுக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (19) என்பவரையும் டவுன் போலீசார் கைது செய்தனர். ஆனால் அரக்கோணம் விண்டர்பேட்டை பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த போது குதிரை சுரேஷை பிடித்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்த போது குதிரை சுரேஷ் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. குதிரை சுரேஷ் காயமடைந்ததால் அவருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது. போலீஸ் காவலில் இருந்த போது குற்றவாளி திடீரென்று பாத்ரூமில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பின்னர் குதிரை சுரேஷை அரக்கோணம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். குதிரை சுரேஷ் வலது காலில் கட்டு போடப்பட்டிருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ராங் ரூமில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கஞ்சா பதுக்கலுக்கு உடந்தையாக இருந்த கோகுல்ராஜ் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் . இந்த சம்பவங்கள் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாங்கிய கடனுக்காக வீட்டை அபகரித்து துரத்தியதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தின் முன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!