ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அடுத்த சாதிக் பாஷா நகரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில், பாலாற்றங்கரையை ஒட்டிய நீர்பிடிப்பு பகுதிகளில் வசித்து வந்த 528 குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில், அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க, ரத்தினகிரி அடுத்த தென்னந்தியாலம் கிராமத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்ய, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆகியோர் நேற்று (டிச.23) சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அங்கு அமைச்சர் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஏற்கனவே அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு தான் அந்த இடம் வேண்டும் எனக் கூறி அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளிடம் கோரிக்கை அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், வாக்குவாதத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இது குறித்து அமைச்சர் காந்தி கூறுகையில், “திமுக ஆட்சியில் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர். அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பல்வேறு இடங்களில் இருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
முதலில் இந்த இடம் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துவிட்டுதான், இங்கு மக்களை குடியமர்த்த முடியும். அப்போது யாருக்கு இல்லை, யாருக்கு தேவை என்பதை அறிந்து இடங்கள் வழங்கப்படும். நேர்மையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட முட்டை விலை.. 50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?