ராணிப்பேட்டை: ஆற்காடை அடுத்த குட்டகரைத் தெருவைச் சேர்ந்தவர் கோபி (40). ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் கோபி, ஆற்காடு அருகே நாராயணபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு நேற்று (ஆக.22) மாலை தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார்.
100 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்
அப்போது தனது ஓட்டுநரின் உதவியுடன், காரை விவசாய நிலத்தில் ஓட்டிப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் காரை பின்னோக்கி இயக்க முயன்றபோது, கார் வயல் வரப்பில் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து கோபி, காரை அங்கிருந்து நகர்த்த முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக கார் வேகமாக பின்னோக்கி சென்று 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் தினேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இதுகுறித்து திமிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பைத் தொட்டி அருகே கிடந்த மண்டை ஓடால் பொதுமக்கள் பீதி!