ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே, நேற்று (ஜன.01) இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் அளித்த தகவலில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதி திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40), இவர் டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று, 10ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் பிரியா (15) உடன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் மாவட்டம், ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர், பில்லாஞ்சி வழியாக சோளிங்கர் நகரை நோக்கி காரில் வேகமாக வந்துள்ளார். அப்போது காரானது திடீர் நகர் பகுதியில், சங்கர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த போது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருந்த மாணவி பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அவரது தந்தை இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோளிங்கர் காவல்துறையினர், கார் விபத்தில் பலியான மாணவி பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கார் ஓட்டுநர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்தில் இறந்த மாணவி பிரியாவின் உறவினர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே, பிரியாவின் உயிரிழப்பு மற்றும் அவரது தந்தை சங்கரின் இரு கால்கள் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சோளிங்கரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த முன்னாள் ராணுவ வீரர்கள்..! காரணம் என்ன?