ராணிப்பேட்டை: அரக்கோணம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்வீதி கிராமத்தில் திரெளபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் ஆகிய பழமை வாய்ந்த கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு பின் வரும் 8ஆம் நாள், மயிலேறு என்னும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று (ஜன.22) மயிலேறு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது பொதுமக்கள் காலை முதலே பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் இரவு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முதுகில் அலகு குத்திக்கொண்டு, கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கியபடியே அம்மனுக்கு மாலையிட முயற்சி செய்தனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில், திடீரென எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பயங்கர சத்தத்துடன் கிரேன் கீழே சாய்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில், மூன்று சக்கர வாகனத்தில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து கொண்டிருந்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (40), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (16) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் (39) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அதன்பின் இன்று (ஜனவரி 23)திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி(85) என்பவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மின்னொளியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம்