ராணிப்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சுமார் 60 காலி வேகன்களுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், இன்று (டிச.19) அதிகாலை 4.20 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையத்தில் யார்டு பகுதி லூப் லைனில் வரும்போது, கார்டு பெட்டியின் கடைசி வேகன் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது.
அப்போது தடதடவென்று சத்தத்தால் ரயில் சக்கரங்கள் கீழே இறங்கியதும் சாமர்த்தியமாக என்ஜின் பைலட் மேலும் இயக்காமல் ரயிலை நிறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ரயில் தரம் புரண்ட சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், காட்பாடி - சென்னை இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், சரக்கு ரயில் எப்படி தடம் புரண்டது எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.