ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டம் தகரகுப்பம் ஊராட்சி ஒட்டனேரி கிராமம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் முனுசாமி - கவுதமி (32). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முனுசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இதனால், கவுதமி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (டிச.31) வழக்கம்போல் வேலைக்குச் சென்ற கவுதமி, பணி முடித்து விட்டு தனது தோழிகளுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மாலை 6.45 மணியளவில் ஒட்டேரி மலையடிவாரத்தில் பைக்கில் வந்த மர்ம நபர், கவுதமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து, கவுதமியை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுதமி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே அதனை தடுக்கச் சென்ற அவரது தோழியையும் மர்ம நபர் தாக்கியதில், அவரும் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற சோளிங்கர் காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான காவல் துறையினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு வாலாஜா அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த கவுதமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக வாலாஜா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து அரக்கோணம் உதவி காவல் காண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், 'உயிரிழந்த கவுதமி அதே பகுதியில் வசித்து வரும் அவரது தங்கை பிரியாவின் கணவர் சஞ்சீவிராயன் (28) என்பவருடன் பழகி வந்துள்ளார். மேலும் கவுதமிக்கு வேறு சில ஆண்களுடனும் தொடர்பு இருந்துள்ளது. இது சஞ்சீவிராயனுக்கு தெரிய வர, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சீவிராயனுடன் பேசுவதை கவுதமி தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கவுதமி கொலை செய்யப்பட்டுள்ளார்' என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். தலைமறைவாக உள்ள சஞ்சீவிராயனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவாகரத்தான மனைவியுடன் திருமணம் : வெட்டிக் கொன்ற முன்னாள் கணவர்