ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆட்சியரகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அமல்படுத்த உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, அரியமான் பீச், காரங்காடு பீச் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதே நேரத்தில் ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு நடத்தவும், அக்னித் தீர்த்தக் கடலில் புனித நீராடவும் கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு 50 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டபங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி நடக்காவிட்டால் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 336 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 103 பேர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு 1364 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சனிக்கிழமையே வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.