ராமநாதபுரம் மாவட்ட ஜூடோ கழகம், தமிழ்நாடு ஜூடோ கழகம் மற்றும் மருதம் விளையாட்டு கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகள் நேற்றும் இன்றும் நடைபெறுகின்றன. பரமக்குடி தனியார் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், தமிழ்நாடு ஜூடோ சங்க பெண்கள் கோட்டத் தலைவர் விஜய மோகன முரளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மினி ஜூனியர், சப் ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 முதல் 16 வயது மாணவ - மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கபடவுள்ளன. இங்கு நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கலந்து கொள்வார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.