ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் இன்று (பிப்.22) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “எங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள 413 ரூபாய் என்ற ஒரு நாள் சம்பளத்தை வழங்காமல், வெரும் 285 ரூபாய் மட்டுமே மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.
மேலும், அரசு விடுமுறை தினங்களிலும் வேலை செய்யக் கூறி கட்டாயப்படுத்துகின்றனர். விடுப்பு கேட்டால் இல்லை என்று மறுத்து வருகின்றனர்.
24 மணி நேரமும் தொடர்ந்து வேலை வாங்கி வருகின்றனர். இதனால், எங்களால் எந்த இடத்திற்கும் சென்று வர முடியாமல் தவித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தூய்மைப் பணியாளர் ராஜி கூறியதாவது, “மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு ஒப்பந்ததாரரிடம் பேசி உரிய சம்பளத்தையும், விடுப்பையும் எங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலூர் ஆட்சியர் உதவி