ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில், நேற்று (அக். 9) மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மீனவர்களின் படகின் மீது மோதியதாக அறிந்ததாகவும், இந்த மாதிரி மீன் பிடிக்கும்போது தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு தாங்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இலங்கை மீனவர்கள் மத்தியில் இனி நடக்கக்கூடாது எனவும், இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் யாரும் இலங்கை கரையோர பகுதிகளில் தொழில் செய்ய கூடாது எனவும், அப்படிமீறி தொழில் செய்தவர்கள் மீது சட்டப்படி மீனவர் சங்கங்களும் மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் எனவும், ஒன்றிய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக மீன்பிடிக்க வழிவகி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (அக். 9) முதல் ஒரு வார காலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தேடுதல் வேட்டையில் போலீஸ்