ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடையக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்களுடன் இந்து முன்னணி, பாஜக, மருதுசேனை அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
இதனால் சில மணி நேரம் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்தால்தான் இறந்தவர் உடலை பெற்றுக்கொள்வோம் எனக் கூறி சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் அருண் பிரசாத் படுகொலை சம்பவத்தில் சாகுல் அமீது, முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ் ஆகிய நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் லெப்ட்ஷேக், சரவணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை: ஒருவர் கைது!