ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு 24 மணி நேரமும் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 9) நள்ளிரவு ஒரு மணி அளவில் ராமநாதபுரம் வீரபத்ர சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 50 வயதுடைய ருத்ரபதி என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தலைக்கவசம் அணிந்தவாறு ஆயுதத்துடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து, சிசிடிவி கேமரா, மின் விளக்குகளை அணைக்குமாறு ருத்ரபதியை தாக்கியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ருத்ரபதி, திருடனின் கையில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி தலைக்கவசத்தை அகற்றக்கூறி மிரட்டியுள்ளார். இதனை சமாளிக்க முடியாமல் கொள்ளையடிக்க வந்த நபர் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் திருடனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்த ருத்ரபதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். துணிவுமிக்க செயலால் பெரும் திருட்டு தவிர்க்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் காவலாளி ருத்ரபதியை பாராட்டி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தின் சிடிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மூன்று நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!