ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் காய்கறி, மீன் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த சந்தைப் பகுதியில் மழைநீர் செல்வதற்கு கால்வாய் எதுவும் இல்லாததால், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் சந்தைப் பகுதி முழுவதும் மழைநீர் நிரம்பியுள்ளது.
இந்த மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துகொண்டதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தும் கழிவுநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சந்தை வியாபாரிகள் மீன் கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பின் நகராட்சியினர் மோட்டர் உதவியுடன் நீரை எடுத்துவருகின்றனர்.