ராமநாதபுரம்: காவல்துறையில் குற்றச் செயல்களில் துப்பறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் ராமநாதபுரத்தில் குற்றச் செயல்களில் துப்பறிவதற்காக ஜூலி, ரோமியோ, லைக்கா என்ற நாய்களும், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் திறன், மோப்ப சக்தி கொண்ட ராம்போ, ஜான்சி உள்ளிட்ட நாய்களும் பணியாற்றி வருகின்றன.
இதில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் டயானா என்று பெயரிடப்பட்ட லேபரடார் வகையைச் சார்ந்த பெண் மோப்பநாய் சிறப்பாக பணியாற்றி வந்தது.
இறுதி மறியாதை
இந்த டயானா மோப்ப நாய் வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் மட்டுமின்றி மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த (அக்) 15 ஆம் தேதி அன்று மாலை வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது. இதன் உடல் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு வளாகத்தில் வைக்கப்பட்டு, நேற்று (அக்.16) இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இதற்கு காவல்துறையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டு, டயானாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு மானியம் வழங்க வேண்டும் - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை