திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேசியமும் தெய்வீகமும் என்ற யாத்திரையை இன்று நிறைவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ்,"சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து உடல் நலம் பெற்று தமிழ்நாடு வந்தவுடன் மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன். அவ்வாறு சந்திப்பது தார்மீக கடமை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு எம்எல்ஏ சீட்டு வழங்கி இருக்கலாம். ஆனால் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி சீட் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா தான். நன்றி மறப்பது நல்லதல்ல என்பதால் அவரை நிச்சயம் நேரில் சந்திப்பேன்.
அதிமுகவும் அமமுகவும் சேர்வதும் சேராமல் இருப்பதும் அவர்களுடைய சொந்தப் பிரச்னை. ஜெயலலிதா உயிரை கொடுத்து உருவாக்கிய இந்த ஆட்சிக்கு என்னால் எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் நான் இந்த ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை.
இரண்டு ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை என்று தொலைக்காட்சிகளில் செய்தி போடுகிறார்கள். இதற்கு என்ன காரணம். நான் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ் ஓபிஎஸ் என இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் என்னால் தொகுதிக்கு எந்த நல்லதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'சசிகலாவை எளிதாக எடை போடக்கூடாது' - கருணாஸ் எம்எல்ஏ