ராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தன் அருகே 22.6 ஏக்கர் பரப்பளவில் ரூ.345 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், ''வரும் 2022ஆம் ஆண்டு பாரத பிரதமர் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் பொழுது, 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டிருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்படும். நாட்டில் கர்ப்பிணி பெண்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடாது. ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தாலும், அது சுகாதாரத்துறை மீது உள்ள குறைபாட்டினைக் காட்டும். அதைத் தவிர்க்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்'' எனக் கூறினார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், '' இந்தியாவிலேயே 11 மருத்துவக்கல்லூரி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதில் முதல் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைவது மிகுந்த சிறப்புக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்று மறைந்த முதல்வரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மை இன மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு முடிவுகளை எடுக்கும். சிறுபான்மையினருக்கு அரணாக என்றும் இருப்போம். சில விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கமுதி, சாயல்குடியில் உள்ள வாரச்சந்தை ரூ. 2 கோடி மதிப்பிலும், அபிராமத்தில் வாரச்சந்தை ரூ. 1 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்படும்'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை!