ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், மதுரை முதல் பரமக்குடிவரையிலான 80 கி.மீ சாலை நான்கு வழி சாலையாக உள்ளது. பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான சாலை இரு வழி சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில், சத்திரக்குடி போகலூர் இரு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் அளித்தும் இரு வழிச்சாலைக்கும் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்த சுங்கச்சாவடியை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆதித்தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமுமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் சத்திரக்குடியிலிருந்து ஊர்வலமாக கிளம்பி போகலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்றனர். அப்போது சுங்கச்சாவடிக்கு செல்ல அனுமதி இல்லை என காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர். இதனால் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மீறிச்சென்றவர்களை காவலர்கள் பாதி வழியில் கயிறு கட்டி வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பனைபொருள்களில் கலப்படம்: உணவு பாதுகாப்புத் துறை பதிலளிக்க உத்தரவு