ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால், கடந்த 1913ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்தியா–இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கியது.
இதையடுத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆலயத்தின் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். நெடுந்தீவு பங்குத்தந்தை எமில் பவுல், ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலையிலிருந்து 74 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகளில் 2,570 பயணிகள் கச்சத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இலங்கையில் இருந்து 6 ஆயிரம் பேர் என மொத்தமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
நேற்றிரவு தேர் பவனி நடைப்பெற்றதையடுத்து, இன்று காலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும்.
இதையும் படிங்க... பலகட்ட சோதனைகளுக்குப்பின் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள்