மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 65ஆவது பிறந்தநாளான இன்று, அவர் தனது தந்தையும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான சீனிவாசனுக்கு சொந்த ஊர் தெளிச்சாத்தநல்லூரில் சிலையை திறந்துவைத்தார்.
இந்தச் சிலையை திறந்து வைத்த கமல்ஹாசன், பரமக்குடியில் மய்யம் திறன் மேம்பாட்டுக் கழகம் அமைப்பதற்காக ஒரிசாவிலுள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவ்விழாவில் சாருஹாசன், பிரபு, சுகாசினி,ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட கமலின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், எனது பிறந்தநாளும் என் தந்தையின் நினைவு நாளும் ஒரே நாள் என்பது காலத்தின் சுழற்சி. நான் சங்கீதம் கற்றுக்கொள்ள என் தந்தையே காரணம். என்னுள் இருக்கும் ரௌத்திரத்திற்கும், நகைச்சுவைக்கும் என் தந்தையே காரணம். என் தந்தையைப்போல நான் வாழவிரும்புகிறேன்.
எனது தந்தை 'நீ அரசியலுக்குப்போக வேண்டும்' என்று கூறுவார். 'நீங்கள் சுதந்திரம் பெறுவதற்காக போராடினீர்கள் நான் அரசியலுக்கு சென்று என்ன செய்வது' என்று கேட்டதற்கு மீண்டும் ஒரு சுதந்திரப் போரட்டத்தை நடத்தவேண்டியது இருந்தால்? என்று பதில் கூறினார்.
தற்போது, மீண்டும் ஒரு சுதந்திரப் போரட்டம் செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். ராமநாதபுரத்திலிருந்து இளைஞர்கள் வேலைக்காக வெளியூருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலேயே இங்கு திறன் மேம்பாட்டுக்கழகம் அமைக்கப்படவிருக்கிறது.
சுதந்திரப் போராட்டம் போல தற்போது திறமை வளர்ப்புப் போராட்டம் மிக முக்கியமாக இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. இலவசங்களைக் கொடுத்து மக்களையும் நாட்டையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள். இலவசங்கள் வாங்க வேண்டாம் என்றால் மக்கள் என்னைக் கோபித்துக் கொள்வார்கள்.
எனது அத்தையுடன் ஐந்தாவது பிறந்தநாளை பரமக்குடியில் கொண்டாடினேன். அதன்பிறகு பல ஊர்களில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளேன். தற்போது, 65வது பிறந்தநாளை பரமக்குடியில் கொண்டாடுவதில் சிறு குழந்தையைப் போல் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'திருவள்ளுவர் யாருக்குத்தான் சொந்தம்?'