ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. தற்போது 2,500க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோர் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
இதில் மிக முக்கியமாகக் காவல் துறையினர், மக்கள் கூடும் இடங்களில் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் காவல் நிலையத்தில் பணிபுரியும் 10 மேற்பட்ட காவலர்களுக்கு தினந்தோறும் தனது சொந்த செலவில் இரண்டு முட்டை, வீட்டில் செய்த சத்துமாவு, கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
இதன் மூலம், காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என, அவர் தெரிவிக்கிறார். இவரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.