ராமநாதபுரம்: பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இல.கணேசனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1975ஆம் ஆண்டு அவரும், நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணிபுரிந்துள்ளோம்.
அகவிலைப்படி கொடுக்காத திமுக அரசு
ஏற்கனவே இல.கணேசனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். 100 நாள் ஆட்சியில், ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது.
இன்னும் ஆறு மாதங்களில் ரூ. 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. கடன் வாங்கியதாக முந்தைய அரசை குற்றம் சொன்ன திமுகவும், இப்போது அதே வழியைத்தான் கடைபிடிக்கின்றனர்.
இந்த அரசு 100 நாட்களில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. திமுகவின் 100 நாள் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
பொறுப்போடு செயல்படாத திமுக
திமுக அரசு, ஏமாற்றுப் பேர்வழிகளின் அரசாங்கமாகவே இருந்து வருகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு வரை ரூ. 28 ஆயிரம் கோடிதான் தமிழ்நாடு அரசின் கடன்சுமையாக இருந்தது.
இவர்கள் கலர் டிவி கொடுக்க தொடங்கியதற்கு பின்னர்தான், தமிழ்நாடு அரசின் கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியது. திமுக அரசு பொறுப்போடு செயல்படாவிட்டால், கடன் வாங்கும் தகுதியையும் இழக்க நேரிடும்” என்றார்.
இதையும் படிங்க: நீர்வளத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ஓ.எஸ்.மணியன் கோரிக்கை!