ராமநாதபுர மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி. இவர் மலேசியாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உஸ்மான் அலி அவரது மகள்கள் ஹநூல் அரசியா, தஸ்லிமா பானு, மருமகன் முகமது ஹசாலி ஆகிய நான்கு பேரும் சொந்த ஊரான ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தனர். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலையில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வந்த இருச் சக்கர வாகனத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் அருகிலிருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.
இக்கோர விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த சங்கர், காரிலிருந்த உஸ்மான் அலி, ஹைநூல் அரசியா, தஸ்லிமா பானு ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் முகம்மது ஹசாலி மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோடிய கார் ஓட்டுநர் செந்தில் குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.