மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சித்தாமை குஞ்சுகள் அதிகமாகக் காணப்படும். இவை கடலுக்கு சிறந்த பாதுகாவலனாக செயல்படுகிறது. சித்தாமைகள் கடலுக்கு வெளியே முட்டைகள் இடுவதால், நாய் மற்றும் மற்ற உயிரினங்களால் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இதனால், வனத் துறையினர் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் முட்டைகளை சேகரித்து, முட்டை பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து, முட்டை பொரிந்து சித்தாமை குஞ்சுகளாக மாறிய பிறகு கடலில் விடுவது வழக்கம்.
இந்த வருடத்திற்கான முட்டை சேகரிப்புப் பணி சற்று தாமதமாக ஜனவரி மாதம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். தற்போது வரை மண்டபம் பகுதியில் 8,909 சீத்தாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் அனைத்து மண்டம் தனுஷ்கோடி அருகே வனத் துறையால் அமைக்கப்பட்டுள்ள முட்டை பொரிப்பகங்களில் பாதுகாக்கப்பட்டன.
ஜனவரி 14ஆம் தேதியில் எடுக்கப்பட்ட 106 முட்டைகளில் 96 முட்டைகள் பொரிந்தன. இந்த ஆமைக் குஞ்சுகளை கடலில்விடும் பணியை இன்று வனத் துறை அலுவலகர் சதிஸ்குமார் தலைமையில் வனத் துறையினர் மேற்கொண்டனர். இந்த ஆமைகளை எம்.ஆர்.சத்திரம் பகுதிகளில் விட்டனர்.இந்த ஆண்டு சென்ற ஆண்டைப் போலவே 20 ஆயிரம் வரை முட்டைகள் எடுக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிப்ரவரி 28ஆம் தேதி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.